Thursday, 3 May 2012

நியூசிலாந்தின் பல்கலைக்கழகங்கள்

தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள முக்கிய நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து, ஒரு அழகான நாடும் கூட. வெளிநாட்டில் சென்று கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு இந்நாடும் ஒரு முக்கிய இலக்குதான்.
இங்கே பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒவ்வொரு பல்கலைக்கழகமும், ஒவ்வொரு துறை சார்ந்த கல்விக்கு பெயர் பெற்று விளங்குகிறது. இந்த சிறிய நாட்டில் மொத்தமே 8 பல்கலைக்கழகங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பல்கலைக்கழகங்கள்,

ஆக்லாந்து(Auckland) பல்கலைக்கழகம் - ஆக்லாந்து(Auckland)
நியூசிலாந்து நாட்டிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில், கலைப் படிப்புகள், வணிகப் படிப்புகள், படைப்பாக்க கலை மற்றும் தொழில்துறை படிப்புகள், கல்வியியல் படிப்புகள், பொறியியல் படிப்புகள், சட்டப் படிப்புகள், மருத்துவம் சார்ந்த படிப்புகள், அறிவியல் படிப்புகள் போன்றவை, இளநிலை, முதுநிலை, பட்ட டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, முனைவர் பட்டம் போன்ற பல நிலைகளில் வழங்கப்படுகின்றன.
கலைப் பாடங்களைப் பொறுத்தளவில், அதிகப் பிரிவுகளில் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

கேண்டர்பரி(Canterbury) பல்கலைக்கழகம் - கிரைஸ்ட்சர்ச்(Christchurch)
இப்பல்கலைக்கழகத்திற்கு, வருடம் சுமார் 70 விசிட்டர்கள் வருகை புரிகிறார்கள். இதன்மூலம் கற்பித்தல் துறையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. இப்பல்கலையில், கடந்த 40 வருடங்களாக ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்சமயம், மொத்தம் 70 நாடுகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இப்பல்கலைக்கழகமானது, நியூசிலாந்திலேயே, சிறப்பு இளநிலைப் பட்டங்களைப் படிப்பதற்கு பெயர்பெற்ற ஒன்றாக விளங்குகிறது.

வைகடோ(Waikato) பல்கலைக்கழகம் - ஹாமில்டன்(Hamilton)
இப்பல்கலையில், பொதுவாக, ஆசிய-பசிபிக் நாடுகளிலிருந்தே அதிக மாணவர்கள் படிக்கிறார்கள் என்றாலும், வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஜெர்மனி, இந்தியா மற்றும் தென் பசிபிக் தீவுகளிலிருந்தும் மாணவர்கள் வந்து படிக்கிறார்கள். மேலாண்மைத் தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள, இப்பல்கலையானது ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.

மாசே(Massey) பல்கலைக்கழகம் - வடக்கு பால்மர்ஸ்டோன்(North Palmerston), வெலிங்கடன்(Wellington) மற்றும் ஆக்லாந்து(Auckland)
படிப்பின்போது, சிறந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும், அதற்கான வழிகாட்டுதல்களும், இதர உதவிகளும் இப்பல்கலையில் சிறப்பான முறையில் வழங்கப்படுகின்றன. இதன்பொருட்டு, இப்பல்கலைக்கழகமானது நியூசிலாந்து நாட்டிலேயே பெயர்பெற்று விளங்குகிறது. இப்பல்கலைக்கழகத்திற்கு மேற்கண்ட மூன்று வளாகங்கள் உண்டு.

லிங்கன்(Lincoln) பல்கலைக்கழகம் - கிரைஸ்ட்சர்ச்(ChristChurch)
மனித வாழ்வில் எப்போதுமே மகத்தான, முதன்மையான, உயர்ந்த இடத்தைப் பெற்றிருப்பது விவசாயம். அத்தொழிலின் வெற்றியின் மூலம்தான், மனித இனம் இந்த உலகில் நீடித்து இருப்பதற்கான சாத்தியம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த வேளாண்மை துறைக்கென்றே, பல பிரத்யேகமான படிப்புகளை சிறப்பான முறையில் நடத்துவதில், லிங்கன் பல்கலைக்கழகம் பெயர்பெற்று விளங்குகிறது.

ஒடாகோ(Otago) பல்கலைக்கழகம் - டுனதின்(Dunedin)
மருத்துவம் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ள நியூசிலாந்து நாட்டில் பெயர்பெற்ற ஒரு பல்கலைக்கழகமாக இந்தப் பல்கலை திகழ்கிறது.
இப்பல்கலையில் படித்த சுமார் 77,000 மாணவர்கள், 120க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்கிறார்கள். இதைத்தவிர, இப்பல்கலையின் பழைய மாணவர் அமைப்புகள், லண்டன், சிங்கப்பூர், சிட்னி, மெல்போர்ன் மற்றும் கோலாலம்பூர் போன்ற உலகின் முக்கிய நகரங்களில் உள்ளன.
நியூசிலாந்தின் எந்தப் பல்கலைக்கழகத்தையும் விட, ஒடாகோ பல்கலைதான், அதிகளவிலான முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களை கொண்டுள்ளது. 2011ம் ஆண்டு வாக்கில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்துள்ள 4,000 மாணவர்களில் 1,200 பேர் முனைவர் பட்ட மாணவர்கள். ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பல்வேறு வகையான உதவித்தொகைகள் இப்பல்கலையால் வழங்கப்படுகிறது.

விக்டோரியா(Victoria) பல்கலைக்கழகம் - வெலிங்டன்(Wellington)
நியூசிலாந்து நாட்டிலேயே, கட்டிடக்கலை தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள, இப்பல்கலைக்கழகம் புகழ்பெற்று விளங்குகிறது. இப்பல்கலையானது, 40 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் மையங்களைக் கொண்டுள்ளது. மேலும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பையும் கொண்டுள்ளது.

எயுடி(AUT) பல்கலைக்கழகம் - ஆக்லாந்து(Auckland)
நியூசிலாந்து நாட்டின் மூன்றாவது பெரிய பல்கலைக்கழகமாக இந்தப் பல்கலை திகழ்கிறது. இப்பல்கலை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. நியூசிலாந்தின் பிற பல்கலைக்கழகங்களை விட, இப்பல்கலை பட்டதாரிகள், அதிகளவில் வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். வருடத்திற்கு, மார்ச் மற்றும் ஜுலை மாதங்களில் இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பலவித தொழிற்சாலைகளுடன் ஒருங்கிணைப்பு உள்ளது.
சிறந்த ஆராய்ச்சி வசதிகள் இப்பல்கலையில் உள்ளன. வகுப்புகள் தனிப்பட்ட முறையிலும், கலந்துரையாடல் முறையிலும் இருக்கும். இங்கு சுமார் 85க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 4000 மாணவர்கள் வந்து படிக்கிறார்கள். நியூசிலாந்து அரசாங்கத்தின் அங்கீகாரத்தை இப்பல்கலை பெற்றுள்ளது. இப்பல்கலைக்கு ஆக்லாந்திலேயே 3 வளாகங்கள் உள்ளன.

அவற்றின் விபரங்கள்
மேற்கூறிய இந்த 8 பல்கலைக்கழகங்களே அந்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்த ஒவ்வொரு கல்வி நிறுவனத்தைப் பற்றியும் விரிவான விபரங்களைத் தந்து, நியூசிலாந்து செல்ல நினைக்கும் இந்திய மாணவர்களுக்கு ஒரு தெளிவான புரிதலை வழங்குவதே கல்விமலர் இணையதளத்தின் நோக்கம்.

No comments:

Post a Comment