
பரந்து விரிந்துள்ளது. உலகின் எந்த மூலையிலும் சென்று பணிபுரியும் அசாதாரண திறமையும், நிர்வாகத் திறனும் அமையப்பெற்ற இன்றைய இளைய சமுதாயத்தின் வெற்றி, நம் தேசத்தின் பொருளாதாரத்திலும் எதிரொலிப்பது எதிர்காலக்கனவுகளை நோக்கி நம்மை மேலும் திறம்பட நகர்த்திச் செல்ல அடித்தளமிடுகிறது. ஐ.டி யுகத்தின் பெரும் பாய்ச்சலில் நினைவிலும் சாத்தியமற்ற பொருளாதார சுகங்களைக் கைக்கொண்ட நடுத்தர வர்க்கம்தத்தமது கனவுகளின் திறவுகோல்களை அடுத்த சந்ததியின் கடமையாகக் கட்டமைத்துக் கொண்டுள்ளது.
சில ஆண்டுகட்கு முன்பு வரை வழக்கமாக சிறுபிள்ளைகளிடம் 'என்னவாகப் போகிறீர்கள்' என்று கேட்கப்படும் கேள்விக்கு 'டாக்டர், எஞ்சினியர், வக்கீல்'என்ற அகர வரிசைப் பட்டியலின் எதோ ஒரு தொழில் லட்சியமாக உருவாக்கப்பட்டிருக்கும். இது அநேகமாக அவர்களின் பெற்றோர் இழந்த ஒன்றை பிள்ளையின் வாயிலாக அடைய மேற்கொண்டிருக்கும் தலைமுறை தவமாகவே பதிய வைக்கப்பட்டிருக்கும். இந்த முத்தொழில் மாயையில் சிக்குண்டு போராடிய நடுத்தர வர்க்கம் தகவல் தொழில் நுட்பத் துறையின் அசுர வளர்ச்சிக்குப் பின் ஒட்டுமொத்தமாக ஒரே திசையில் பயணிக்க முண்டியடித்துக் கொண்டுள்ளது. மருத்துவம் தலைமுறைத் தொழிலாகவும்,சட்டம் அரசியல் நுழைவாயிலாகவும் மாறி விட்டபின்பு கட்டிடம் கட்டுபவர்கள் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்ட பொறியாளர்கள் இன்று கணினிவல்லுனர்களாகவும் மாறமுடியும் என்பது படிப்பிற்கும், தொழிலுக்கும் தொடர்பற்ற காரணிகளை சட்டை செய்யாத நிகழ்காலத்தின் மாயம்.
அச்சில் வார்க்கப்பட்ட சூளைச் செங்கல்களைப் போல கல்லூரிகள்வெளியேற்றும் பொறியாளர்களின் எண்ணிக்கைக்கு அப்பட்டமான காரணமாக இருப்பது பெற்றோர் அல்லது உறவினர்களின் மாணவர்கள் மீதான நிர்ப்பந்தமே. இரண்டாம் முறையாக வந்திருக்கும் தகவல் தொழில் நுட்ப தேக்கநிலை இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பொறியியல் கல்வி இடங்களை நிரப்பாமலே விட்டுச் செல்லத் தேவையான மனப்போக்கை காலியாகும் வேலைகள் செய்துகொண்டுள்ளன. கணினித் துறையில் அபாயச் சங்குகள் ஒலிக்கும் இந்தச் சூழ்நிலையில் பிற துறைகளை நோட்டம் விட்டுத் தெரிந்தெடுக்கும் பெற்றோர், வணிகமயமாகிப் போன கல்வியின் கொள்ளைக்கு தங்கள் பிள்ளைகளையே காவு கொடுக்கும் நவீன ஆப்ரஹாம்களாக உருவெடுக்கின்றனர்.
இது போன்ற இறுக்கமான கல்விச் சூழலில் பயிலும் மாணவர்கள் வேலை கிடைக்காத நிலையிலோ அல்லது வேலை இழந்த சூழலிலோ மன திடம் அற்றவர்களாய் தன்னம்பிக்கை இழந்து போவது இயற்கையான ஒன்றாகிறது.இத்தகைய நிகழ்கால சிக்கல்களுக்கு மத்தியில் எந்தவித பதட்டமும் இல்லாத இளம்பிராயத்தின் கொண்டாட்டங்களோடு கடந்து சென்ற என் பள்ளி, கல்லூரி நாட்கள் இன்றைய மாணவர்களைப் பார்த்து வருத்தம் கொள்ளத்தான் வைக்கின்றன. வெறும் எதிர்காலக் கனவுகளை மட்டுமே புடம் போட்டு வளர்த்து விடும் பாடத்திட்டங்கள் மாணவர்களை மனப்பாடம் செய்யும் மந்தைகளாக மட்டுமே அனுமதிக்கின்றன. மதிப்பெண்கள் மீது நாட்டமின்றி இயல்பாய்க் கல்வி கற்று நல்லதோர் பணியிலுள்ளோர் கூட தம் பிள்ளைகளைபுத்தகச் சிலுவையில்தான் அறைந்து வைத்துள்ளனர்.
சமூகம், அரசியல், மொழி என்று பரந்து பட்ட சிந்தனைகளை தட்டி எழுப்ப வேண்டிய பள்ளிகள் பன்னிரெண்டாம் வகுப்பின் பாடத்திட்டத்தை பதினொன்றிலேயே முடித்துவிட்டு தேர்வு என்னும் பெரும் போர்க்களத்திற்கு வருடக் கணக்காய் வியூகம் வகுத்துத் திரிகின்றன. மாய அரக்கனோடு மோதும்'ஹாரி பாட்டர்' சிறுவன் போலத் தான் பரிதாபமாகத் தெரிகிறார்கள் விடுமுறையில் கூட 'சம்மர் கிளாஸ்' செல்லும் கண்ணாடி அணிந்த சிறு பிள்ளைகள்.

பாவம் எழுத்தாளர்கள். பண்பாட்டையும், சமூக மறுமலர்ச்சியையும் இலக்கியம் வாயிலாக எடுத்துச் சென்று மொழியின் கூறுகளான நூல்களின் வாயிலாக வெளிப்படுத்தும் இடத்தில் இவர்கள் எதிர்கொள்வது இந்த மனப்பாட கும்பலைத்தான். ஒரு தலைமுறையின் அறிவைக் கூர் மழுங்கச் செய்து மொன்னையாக்கி அனுப்பும் கல்விச்சூழல் எதிர்காலஎழுத்தாளர்களையோ, விமர்சகர்களையோ குறைந்தபட்சம் வாசகர்களையோ கூட உருவாக்குவதில்லை. வாசகர்கள் எழுத்தாளர்களாக உருமாறிய காலம் போய் எழுத்தாளர்களே வாசகர்களாய் சுருங்கிக் கொண்ட விரோதமான சூழ்நிலையிலும் 'ஆத்ம திருப்திக்காக' என்ற சுய ஆறுதலுடன் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். இலக்கியச் செறிவுள்ள புனைவுகள்,புதினங்கள் மலை போல் எழுதப்பட்டு குவிந்தாலும், கேள்வித்தாளை கூர்ந்து நோக்கி மாணவர்கள் சொல்வது போல இது 'அவுட் ஆப் சிலபஸ்' தான் அவர்களுக்கு.
சமச்சீர் கல்வி என்று அரசும், கல்வி இயக்கங்களும் வரிந்து கட்டிக்கொள்ளும்சூழலில் தன்னம்பிக்கையூட்டும் அனுபவக் கல்விக்கு பெற்றோரின் பங்களிப்பு மிகவும் அவசியமாகிறது. பாடத்திட்டம் தவிர்த்த பல்துறை வாசிப்பு குறைந்த பட்சம் மன அழுத்தத்தில் இருந்தாவது மாணவர்களை மீட்கும். இந்நிலை இப்படியே தொடருமானால் பெரும் மனச்சிடுக்குகள் கொண்ட நுண்ணறிவற்ற தலைமுறை தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கும். 'மனப்பாடப் பகுதி'என்றிருந்த சில பக்கங்கள் மறைந்து மொத்த புத்தகமும் அப்படியாகிவிட்ட கொடுமைக்கு எந்தக் கல்விமுறை முடிவு கட்டும் என்பது பெரும்கேள்விக்குறியே.
நன்றி:ராஜேஸ் ஆரோக்கியசாமி
No comments:
Post a Comment