Thursday, 3 May 2012

நியூசிலாந்து ஏயுடி பல்கலைக்கழகம்

நியூசிலாந்து நாட்டின் மூன்றாவது பெரிய பல்கலைக்கழகமாக இந்தப் பல்கலை திகழ்கிறது. இப்பல்கலை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. நியூசிலாந்தின் பிற பல்கலைக்கழகங்களை விட, இப்பல்கலை பட்டதாரிகள், அதிகளவில் வேலை வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.
வருடத்திற்கு, மார்ச் மற்றும் ஜுலை மாதங்களில் இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பலவித தொழிற்சாலைகளுடன் ஒருங்கிணைப்பு உள்ளது.
சிறந்த ஆராய்ச்சி வசதிகள் இப்பல்கலையில் உள்ளன. வகுப்புகள் தனிப்பட்ட முறையிலும், கலந்துரையாடல் முறையிலும் இருக்கும். இங்கு சுமார் 85க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 4,000 மாணவர்கள் வந்து படிக்கிறார்கள். நியூசிலாந்து அரசாங்கத்தின் அங்கீகாரத்தை இப்பல்கலை பெற்றுள்ளது. இப்பல்கலைக்கு ஆக்லாந்திலேயே 3 வளாகங்கள் உள்ளன. 
AUT ஆராய்ச்சி நிறுவனமானது, AUT பல்கலைக்கழகத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். முதுநிலை பட்ட மாணவர்களுக்கு, சிறந்த பயிற்சியை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.
இந்த ஆராய்ச்சி திட்டத்தில், மொத்தம் 19 வகையான ஆராய்ச்சி மையங்கள் உள்ளன.
AUT பல்கலைக்கழகத்தில் படிக்க விண்ணப்பித்தல்
ஒரு மாணவர் இப்பல்கலையில் படிக்க விரும்பினால், நேரடியாக பல்கலைக்கோ அல்லது ஏயுடி பதிவுபெற்ற முகவரிடமோ விண்ணப்பிக்க வேண்டும். செமஸ்டர் தொடங்கும் தேதிக்கு, குறைந்தபட்சம் 2 மாதங்கள் முன்னதாகவே, விண்ணப்பங்கள் சென்றுசேருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைகள், கட்டண விபரங்கள் மற்றும் மாணவர் சேர்க்கையின் பல்வேறு படிநிலைகள் பற்றி விரிவாக அறிந்துகொள்ள www.aut.ac.nz/study-at-aut/international-students/how-to-apply/fee-payments/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
மாணவர் நல சேவைகள்
தாய்நாட்டிலிருந்து, கடல் கடந்து சென்று, ஏதோ ஒரு நாட்டில் படிப்பிற்காக சில வருடங்கள் வசிக்க வேண்டியிருக்கும் மாணவர்கள், ஆரம்பத்தில் மனோரீதியாக சிறிது பாதிக்கப்படலாம் அல்லது தனிமையுணர்வில் வாடலாம். எனவே, அத்தகைய சூழல்களைத் தவிர்க்க, ஏயுடி பல்கலைக்கழகம், பலவிதமான சேவைகளை நடத்துகிறது.
AUT இன்டர்நேஷனல்
56, Wakefield Street என்ற முகவரியில் அமைந்துள்ள ஏயுடி இன்டர்நேஷனல் அலுவலகம்தான், சர்வதேச மாணவர்கள், தங்களுக்கான தகவல் மற்றும் உதவியைப் பெறுவதற்கான முதல் மையமாகும்.
நட்புணர்வுடன் கூடிய ஒரு குழுவானது, விண்ணப்பம் நிரப்புதல் மற்றும் சேர்க்கை செயல்முறையில் உங்களுக்கு உதவி புரியும்.
எந்தப் படிப்பை தேர்வு செய்வது என்பது தொடர்பான ஆலோசனைகளும் இங்கு கிடைக்கும்.
சர்வதேச மாணவர் உதவி சேவைகள்(International student support services)
நட்புணர்வுடன் கூடிய குழுவானது, வளாகத்தில் உங்களை வரவேற்று, நியூசிலாந்தில் உங்களுக்கு தேவைப்படும் அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்கும். உங்களுக்கு தேவையான நடைமுறை நெறிகளை அவர்களிடம் கேட்டுப் பெறலாம்.
மாணவர் சேவைகள்(Student Services)
ஏயுடி பல்கலையில் உங்களின் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட, தேவைப்படும் தகவல்கள் மற்றும் உதவிகளை இந்த மாணவர் சேவைகள் தருகின்றன.
அறிமுக நிகழ்ச்சி
இப்பல்கலைக்கு, வெளிநாட்டிலிருந்து புதிதாகப் படிக்க வரும் மாணவர்கள், கணினிப் பயன்பாட்டு விதிமுறைகள், நேர மேலாண்மை, அசைன்மென்ட் தயாரித்தல், பாட விபரங்கள், வளாக சுற்றுலா, நகர சுற்றுலா, சேவைகள் மற்றும் கிடைக்கக்கூடிய வசதிகளைப் பற்றி அறிமுகப்படுத்துதல், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர ஊழியர்களுடன் அறிமுகமாதல் போன்ற நோக்கங்களுக்காக இந்த நிகழ்ச்சியானது பல்கலையால் ஏற்படுத்தப்படுகிறது.
ஆங்கிலமொழி பயிற்சி படிப்புகள்
பல்கலை படிப்புகளில் சேரும் அளவிற்கு ஆங்கில மொழியறிவு இல்லாத மாணவர்களுக்கு, 3 நிலைகளிலான ஆங்கிலப் பயிற்சி படிப்புகள் நடத்தப்படுகின்றன.
ஆங்கில மொழியில் டிப்ளமோ, பல்கலை படிப்பில் சேர்வதற்கான ஆங்கிலமொழி தகுதிச் சான்றிதழ் மற்றும் படிப்பிற்கான ஆங்கில மொழி தகுதிச் சான்றிதழ் என்ற நிலைகளில் படிப்புகள் உள்ளன.
ஆங்கில மொழி தகுதியைப் பெறாத மாணவர்கள், இப்படிப்புகளில் ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெறுவார்கள்.
இத்தகைய படிப்புகளை எயுடி சர்வதேச மையம் வழங்குகிறது. இதன் முழு விபரங்களுக்கு www.autinternationalhouse.info என்ற தளத்தைப் பார்க்கவும்.
நூலகம்
இப்பல்கலைக்கழக நூலகத்தில், மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரம் புத்தகங்களும், ஜர்னல்களும் உள்ளன. மேலும், 82,000 E-journals மற்றும் 41,000 E-books உள்ளன. நூலகம் பற்றிய விரிவான தகவல்களுக்கு www.aut.ac.nz/library என்ற இணையதளம் செல்லவும்.
AUT பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்
கலை மற்றும் வடிவமைப்பு
இத்துறையில் இளநிலை, முதுநிலை, முதுநிலை டிப்ளமோ, இளநிலை ஹானர்ஸ், முனைவர் பட்டம் உள்ளிட்ட நிலைகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
கிராபிக் டிசைன், டிஜிட்டல் டிசைன், பேஷன், துணைநிலை பேஷன் தொழில்நுட்பம், கலைகள் மேலாண்மை உள்ளிட்ட பலவித படிப்புகள் இத்துறையில் வழங்கப்படுகின்றன.
வணிகப் படிப்புகள்
வணிகப் பொருளாதாரம், வர்த்தக சட்டம், நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் பணியாளர் உறவு, மேலாண்மை, அக்கவுண்டிங், மார்க்கெடிங், சில்லறை வணிகம் மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இத்துறை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தகவல்தொடர்பு படிப்புகள்
இதழியல்(Journalism), தொழில்முறை தகவல்தொடர்பு, படைப்பாக்க தொழில்துறை, டிஜிட்டல் மீடியா, பொதுமக்கள் தொடர்பு, ரேடியோ, தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
கம்ப்யூட்டிங் மற்றும் கணித அறிவியல்கள்
வானியல், கணிப்பொறி அறிவியல், பகுப்பாய்வு, தகவல்தொடர்பு அமைப்புகள் அறிவியல், ஐ.டி.(IT) பாதுகாப்பு, மென்பொருள் மேம்பாடு மற்றும் தகவல்தொடர்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
படைப்பாக்கத் தொழில்நுட்பம்
படைப்பாக்கத் தொழில்நுட்பத்தில் இளநிலை மற்றும் இளநிலை ஹானர்ஸ் படிப்புகள் மற்றும் முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
கல்வியியல் படிப்புகள்
மாண்டசோரி(Montessori) முறை படிப்புகள், நடுநிலைக் கல்வியில் பட்ட டிப்ளமோ, இளநிலை ஹானர்ஸ் கல்வி, கல்வி தலைமைத்துவத்தில் முதுநிலை, கல்வியில் முனைவர் பட்டம் உள்ளிட்ட பல நிலைகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பொறியியல் படிப்புகள்
எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சிஸ்டம், முதுநிலை பொறியியல், நெட்வொர்க் மற்றும் தகவல்தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மருத்துவ அறிவியல் படிப்புகள்
வாய்சார்ந்த(oral) மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகள், கால் பாதம் சார்ந்த மருத்துவம், உளவியல் மருத்துவம், அக்குபஞ்சர், குழந்தை நல மருத்துவம், மருத்துவ நெறிமுறைகள், சேவை மருத்துவம், நர்சிங், மனம்-உடல் நலன்சார்ந்த மருத்துவம், பொதுநல மருத்துவம், மறுவாழ்வு மருத்துவம் உள்ளிட்ட பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா படிப்புகள்
தங்குமிடம், நிகழ்ச்சிகள் மேலாண்மை, உணவு மற்றும் பானங்கள், சுற்றுலா, மார்க்கெடிங், வணிகம் சமூக அறிவியல்கள் போன்ற பலவித படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மொழி மற்றும் சமூக அறிவியல் படிப்புகள்
சீன மொழி, படைப்பாக்க எழுத்து, சிக்கல் தீர்வு, ஆங்கில மொழி, கிரிமினாலஜி, மொழிபெயர்ப்பு, சமூக அறிவியல், ஜப்பானிய மொழி, குழந்தைகள் மற்றும் பொதுக் கொள்கை, கொள்கை படிப்புகள் மற்றும் இளைஞர் மேம்பாடு உள்ளிட்ட பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
சட்டப் படிப்புகள்
இளநிலை, இளநிலை ஹானர்ஸ், எம்.பில்(M.Phil) மற்றும் முனைவர் பட்டம் என்ற நிலைகளில் சட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
அறிவியல் படிப்புகள்
மீன் வளர்ப்பு, சூழ்நிலை அறிவியல், உணவு அறிவியல், சுகாதாரப் பாதுகாப்பு, செய்முறை கணிதம், செய்முறை இயற்பியல், செய்முறை மைக்ரோபயாலஜி உள்ளிட்ட பலவகைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு படிப்புகள்
கோச்சிங், உடற்பயிற்சி அறிவியல், சுகாதாரம் மற்றும் உடல்சார்ந்த கல்வி, மேலாண்மை, வெளிப்புறக் கல்வி, உடல்சார் நடவடிக்கை மற்றும் சத்துணவு உள்ளிட்ட பல்வேறான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மேலே குறிப்பிட்ட அனைத்து வகை படிப்புகள் பற்றிய இன்னும் பல விரிவான விபரங்கள், அதற்கான கட்டணங்கள் பற்றி அறிந்துகொள்ள http://www.aut.ac.nz/study-at-aut/study-areas என்ற இணையதளம் செல்லவும்.
படிப்பின்போதான பயிற்சி
இங்கு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களுக்கு விருப்பமான துறையில், 2 AUT மெயின் பேப்பர்களுடன், பகுதிநேர பணி வாய்ப்பு உண்டு. இதைப்பற்றி விரிவான விபரங்களை அறிந்துகொள்ள www.autstudyabroad.info என்ற இணையதளம் செல்லவும்.
உதவித்தொகை மற்றும் விருதுகள்
ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள், இப்பல்கலை வழங்கும் உதவித்தொகையைப் பெறுகிறார்கள்.
இவைப்பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள www.phdscholar.ac.nz, www.nzaid.govt.nz மற்றும் www.newzealandeducated.com என்ற இணையதளங்களுக்கு செல்லவும்.
தங்குமிட வசதி
AUT பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு முடிவுசெய்தால், தங்குமிடம் குறித்து முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
AUT வளாக தங்குமிட வசதிகள்
* ஒரு செமஸ்டருக்கான ஒப்பந்தத்துடன், AUT தங்குமிட வளாக வசதிகள் உள்ளன.
* தனி அறைகள், அபார்ட்மென்ட் மாதிரியிலான தங்குமிட வசதிகளும் உள்ளன.
* மேலும் 24 மணிநேர பாதுகாப்பு வசதிகளும் உண்டு.
* கண்காணிப்பு மேலாளர்கள், இணையதள வசதிகள், தொலைக்காட்சி மற்றும் இதர வசதிகள் போன்றவையும் உள்ளன.
* முதலில் வருபவர்களுக்கே தங்குமிட வசதிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
AUT பல்கலையில் படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கான தங்குமிடங்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள www.aut.ac.nz/student-life/student-services/new-students/residential-accomodation என்ற இணையதளத்தில் தேடவும்.
இல்ல தங்கும் வசதி
நியூசிலாந்தில், ஒரு குடும்பத்துடன் இணைந்து அவர்களின் இல்லத்தில் கட்டணத்திற்கு தங்கிக்கொள்ளும் வசதியும் உண்டு. உங்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு படுக்கையறை மற்றும் ஒரு நாளைக்கு 2 வேளை உணவு தரப்படும். வீட்டிலுள்ள இதர வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேசமயம், அந்த வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இதன்மூலம், அந்நாட்டின் வாழ்க்கைமுறை மற்றும் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
இல்ல தங்கும் வசதி தொடர்பாக மேலும் விபரங்களை அறிந்துகொள்ள www.kiwihomestay.co.nz என்ற இணையதளம் செல்லவும்.

No comments:

Post a Comment